Friday, February 26, 2016

நல்ல குடும்பம் -2 (27/02/16)

ஊர் என்ற பட்டணத்திலிருந்து ஆரான் என்ற பட்டணம் வரை 965km தொலைவை தேராகு தனது 200 வது வயதில் நடந்துள்ளார். முதிர் வயதில் ஒரு நாளைக்கு 15km நடந்திருந்தாலும் ஒன்றரை வருடத்தில் ஆரான் பட்டணத்தை அடைந்திருப்பார்கள். 205 வயதில் தேராகு ஆரானில் மரித்ததாக வாசிகின்றோம் (ஆதி 11:31-32). அப்படியென்றால் ஆபிரகாமின் குடும்பம் ஆரான் பட்டணத்தில் தங்குவதற்கு முக்கிய காரணம் தேராகுவின் முதிர் வயதாகத்தான் இருந்திருக்கும். குறைந்தது மூன்று வருடம் ஆரான் பட்டணத்தில் ஆபிரகாம் தங்கியிருந்து, தனது தகப்பனை பராமரித்திருகின்றார்.

தேராகு இறந்த பிறகு, ஆபிராகாமின் 75 வது வயதில், "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதி 12:1-2) என்கிறார். ஆபிரகாம் தனது முதிர் வயதான தகப்பன் தேராகுவை பராமரித்திருகின்றா? என்று தேவன் சோதித்திருக்க கூடும். ஆகவே தான் தேராகு இறந்த பிறகு, தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்படும் படியாக தேவன் கட்டளையிடுகின்றார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஐந்தாவது கட்டளையாக, "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக' (யாத் 20:12) என்று கூறியுள்ளார்.

குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தின் பொருளாதார தேவையைச் சந்திக்கும் தகப்பன் மட்டுமல்ல, தாயும் கனம்பண்ணப்பட வேண்டும்மென்பதே தேவ கட்டளையாயிருக்கிறது. இப்படிபட்ட தேவகட்டளைகள் வெளிப்படும் முன்பே அதாவது மனசாட்சியின் காலத்திலேயே ஆபிரகாம் தனது தகப்பனை பராமரித்துள்ளார். தாயானவள் பத்து மாதம் கர்ப்பத்தில் சுமந்திருக்கிறாள். கருவிலே தாயின் மூலமாக நம்முடைய தேவைகளை தேவன் சந்தித்தார். பின்னர் தந்தையின் கடின உழைப்பின் மூலமாக நம்முடைய தேவைகளை தேவன் சந்தித்தார். நம்முடைய தாயும் தந்தையும் நமது வாழ்நாட்களின் நீண்ட காலம் நம்முடன் வருகிறார்கள். அவர்கள் நமக்காகவும் நம்முடைய வளர்ச்சிக்காவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களை முதிர் வயதில் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பு.

கிறிஸ்துவ பெயர்களை வைத்துகொண்டு, திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகள் உண்டு. கோபத்தில் பெற்றோர்களிடம் சீரும் பிள்ளைகள் உண்டு. முதிர் வயதில் பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகள் உண்டு. அபிரகாம் தனது 75 வயதில் தகப்பனுக்கு கீழ்ப்படிந்தார். தனது தகப்பனை பராமரித்தார். ஆகவே தேவனிடமிருந்து, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" என்ற உயரிய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார். இதை வாசிக்கின்ற அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் உங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்திருங்கள். அவர்களைக் கனப்படுத்துங்கள். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
------------------------------------------

குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்: நாள் 18
இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15 :7

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15 :8

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். யோவான் 15 :9
------------------------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment