Saturday, March 5, 2016

ஏன் கானான் தேசம்? (பாகம் -2)

தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் (ஆதி 9:1) என்று ஆசிர்வதித்தார். தேவனின் இந்த வார்த்தைக்கு எதிராக மக்கள் ஒரே இடத்தில் வாழ விரும்பினார்கள். பெருவெள்ளம் ஏற்ப்பட்டு 102 ஆண்டுகளில் மனிதர்கள் தங்கள் ஒரு பாதுகாப்புக்காகவும், பூமியில் தாம் சிதறிப்போய்விடாமல் இருக்க ஆசைப்பட்டு, வானத்தை எட்டும் ஒரு கோபுரத்தை கட்ட நினைத்தார்கள். அவர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தமையால், தாங்கள் கட்டும் கோபுரத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற மேட்டிமையான எண்ணத்துடன் இருந்தார்கள் (ஆதி 11:4-6).

தேவன் கீழே இறங்கிவந்தார். அவர்களுடைய கர்வத்தை அழிக்க முடிவெடுத்தார். ஒரே மொழி பேசிவந்த அவர்கள் இடையே தேவன் குழப்பத்தை உண்டாக்கினார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள் (ஆதி 11:7-8). உலக மொழிகள் அனைத்தும் அங்குதான் தோன்றின. பாபேல் என்றால் குழப்பம் என்று பொருள்படும் "பாபல்" என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்ததாகும். பாபிலோன் எனும் வார்த்தை பாபேல் என்னும் வார்த்தையிலிருந்து வந்ததாகும்.

மொசப்பத்தோமியா தேசத்தில் வாழ்ந்த பாபிலோனியர் நிம்ரோத்தை அரசனாகவும், கடவுளாகவும் மதித்து வணங்கினர். 'செமிராமிஸ்' என்ற பெண் தேவதை நிம்ரோதின் தாயாகவும் மனைவியாகவும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விக்கிரக வழிபாடு கொண்ட பாகால் மக்களின் தேவதையாக செமிராமிஸ் காணப்பட்டாள். செமிராமிஸ் என்ற பெண் தேவதைக்கு 'அஸ்தரோத்' என்ற பெயரும் உண்டு. 'அஸ்தரோத்' என்றால் 'கோபுரங்களை உண்டுபண்ணின பெண்' என்று பொருள். இவளுடைய தலையில் கோபுரம் போன்ற கிரீடம் வைக்கப்பட்டிருக்கும். இவளுக்கும் நிம்ரோத் மன்னனுக்கும் பிறந்த குழந்தை தான் “தம்மூஸ்”. இம்மூவரையும் இன்றளவும் மக்கள் தெய்வங்களாக பல்வேறு பெயர்களில் வழிபட்டு வருகின்றார்கள்.

ஆகவே தான் புனித நகரமாக எருசலேமும், விக்கிரக வழிப்பாட்டின் பிறப்பிடமாக பாபிலோன் நகரமும் இருகின்றது. இப்படிப்பட்ட தேசத்தில் வாழ்ந்த ஆபிரகாமின் தகப்பன் விக்கிரத்தை வழிபட்டதில் எவ்வித வியப்பும் இல்லை. ஆனால் வேதாகமத்திலோ அல்லது வரலாற்றிலோ அபிரகாம் விக்கிரத்தை வழிபட்டதாக எந்த வித குறிப்பும் இல்லை.
பாபேல் கோபுரம் இடிக்கட்டு சுமார் 250 வருடங்களாக காமின் சந்ததியை ஆளவும் அவர்களது கானான் தேசத்தை சுதந்தரிக்கவும், தமக்கு கீழ்ப்படிகின்ற தம்மை விசுவாசிகின்ற ஒரு மனிதனை தேவன் தேடினார். அப்பொழுது சேமின் சந்ததியில் விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் பிறந்தார். ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிகின்றவராகவும், பெற்றோரையும், மனைவியையும் மதித்து நடகின்றவராகவும் காணப்பட்டார். அவருடைய குடும்பம் கானானிய மன்னனின் ஆட்சியில் சாதாரணமான நிலையில் வாழ்ந்து வந்தது. ஆபிரகாமின் 70 வது வயதில், “மகிமையின் தேவன் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா” (அப் 7:2-4), என்று அழைத்தார். கானான் தேசத்தை சுதந்தரிக்கச் செய்தார். ஆமேன். அல்லேலுயா.
-----------------------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment