கர்த்தருடைய அழைப்பை அனுசரித்து தன்னுடைய சொந்த தேசத்தை, இனத்தை, வீட்டை, உறவுகளை விட்டுவிட்டு கானானை நோக்கி பயணம் செய்த ஆபிரகாமை தைரியப்படுத்துவதற்காக தரிசனத்திலே கர்த்தர் அவரோடு பேசினார். காரணம் கடந்த பத்து வருடங்களாக கானானை நோக்கி பயணம் செய்த ஆபிரகாமின் வாழ்வில் பலவிதமான சோதனைகள் வந்தது. பல விதமான ஆபத்தான, இக்கட்டான, வேதனையான, நிந்தையான, அவமானமான, பயமான, விரக்தியான சூழ்நிலைகள் வந்தது. அவை எல்லாவற்றிலும் கர்த்தர் அவனோடிருந்து அவனை பாதுகாத்து வழிநடத்தி கொண்டு வந்தார்.
அடிக்கடி தரிசனத்திலும் சொப்பனத்திலும் நேரடியாகவும் அவரோடு பேசினார். கர்த்தரின் அருகில் நின்று பேசுகிற அளவிற்கு ஆபிரகாம் நல்ல ஒரு உறவை ஆண்டவரோடு வைத்திருந்தார். ஆனாலும் ஆபிரகாமின் வாழ்வில் ஒரு உண்மையான சந்தோசமில்லாத சூழல் இருந்து வந்தது. காரணம் அவனுக்கு பிள்ளைகளில்லாதிருந்தது. அது அவருக்கு மிகுந்த பாரத்தை கொடுத்திருக்க வேண்டும். எனவே கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனத்திலே தோன்றி அவனோடு பேசினார். உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அன்று ஆபிரகாமோடு நேரடியாக பேசின ஆண்டவர் இன்றைக்கு ஏன் நம்மோடு நேரடியாக பேசவில்லை என்கிற சந்தேகம் வரலாம்.
ஆபிரகாம் வாழ்ந்த நாட்கள் நாம் வாழ்கிறது போல கிருபையின் காலத்தில் இல்லை. உலகத்தின் தோற்றத்திற்கு பின்பு உள்ள காலங்களை வேத அறிஞர்கள் பத்து யுகங்களாக, அல்லது ஆட்சி காலங்களாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாம் சிந்தித்து பார்க்கும் போது ஆபிரகாம் வாழ்ந்த காலம் என்பது நான்காவது யுகமான வாக்குத்தத்த ஆட்சி காலத்தில் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆபிரகாம் முதல் மோசே வரையுள்ள கால கட்டமான சுமார் 430 வருடங்கள் வரை இருக்கலாம். நியாயப்பிரமாணம் மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது வரை இந்த கால கட்டத்தை வாக்குத்த காலம் என்று அழைக்கிறோம்.
இயேசு கிறிஸ்து உலகத்திலிருந்து பரலோகத்திற்கு சென்றபின் தன்னுடைய பிள்ளைகளெல்லாருக்கும் இலவசமாக இன்றுவரைக்கும் பொழிந்தருழிக்கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவரான தேற்றரவாளர், காரியஸ்தர் சகல சத்தியத்திலும் வழிநடத்துகிற ஆவியானவர் அன்று இல்லை. இன்றைய ஆராதனை முறை இல்லை,பரிசுத்த வேதாகமம் இல்லை.தீர்க்கதரிசிகள் இல்லை, பாவத்தை குறித்த அறிவு இல்லை. ஆனால் தேவனுக்கு பயந்து மனசாட்சிப்படி மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனாலும் அப்படிப்பட்டவர்களிடத்திலும் தேவன் பரிசுத்தத்தையும் விசுவாசத்தையும் எதிர்பார்த்தார். எனவே கர்த்தர் தன்னுடைய செயல் திட்டத்தை நடத்துவதற்கான மனிதனை தேடி ஆபிரகாமை கண்டு பிடித்தார்.
ஆபிரகாமும் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவராய் நடந்து வந்தார். எனவே கர்த்தர் ஆபிரகாமை அடிக்கடி சந்தித்து தன்னுடைய காரியங்களையும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் பலவித சூழல்களில் வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட நேரத்தில் ஒருதடவை கர்த்தர் தரிசனத்தில் தோன்றி அவரை ஆறுதல் படுத்தினார்.. தொடரும்..
------------------------------------------
குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்: நாள் 27
இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். யாக்கோபு 1:3
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். 3 யோவான் 1 :2
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2 :9
----------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment