Tuesday, March 22, 2016

முடிந்தது

இயேசு இவ்வுலகத்தில் மனிதனை மீட்கும் மாபெரும் பணியை நிறைவுசெய்ய வந்தார். அவர் சிலுவையில் தொங்கி சாத்தானின் தலையை நசுக்கி அவனை வென்று, மனிதர்களை மீட்க்கும் பணியை நிறைவு செய்தார். மனுக்குலத்துக்கான இந்த மிட்பின் பணி முடிந்ததும் “முடிந்தது” (யோவான் 19:30) என்று இயேசு கூறினார். இதற்க்கு கிரேக்க மொழியில் “செலுத்தப்பட்டது” (PAID) என்று பொருள். ஆகவே நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது. “முடிந்தது” என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.

1. சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது. 2. பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங்களும் நிறைவேறி முடிந்தது. 3. உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக்குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது. 4. இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகளும், மாம்சத்தில் வெளிப்பட்ட அவருடைய இந்த உலக வாழ்க்கையும் முடிந்தது. 5. மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

ஒரு பெண் பிரசவ வேளையில் வேதனை தாங்காமல் சத்தமிடுகிறாள், புலம்புகிறாள். ஆனால் குழந்தை பிறந்ததும் வேதனையை மறந்து மகிழ்ச்சி அடைகிறாள். அதே போல இயேசுவும், சிலுவையில் மாபெரும் வேதனைகளை அனுபவித்து உலகிற்கு மீட்பைப் பெற்றெடுத்தார். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி.12:2). இயேசு கிறிஸ்து சிலுவையில் பெற்றறெடுத்த மீட்பு, மனிதனின் வாழ்வில் கிடைக்க வேண்டுமானால் மனிதன் செய்ய வேண்டிய காரியம் உண்டு. மனிதன் செய்யவேண்டியதெல்லாம் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதே. அப்போது மனிதனுக்கு மிட்புக் கிடைக்கும்.

நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் மூலமாக உண்டாகிய கீழ்ப்படியாமையினால் இந்த உலகில் பாவமும் சாபமும் ஏற்ப்பட்டது. சிலுவை மரத்தின் மூலமாக உண்டாகிய கீழ்ப்படிதலினால் உலகின் பாவமுத்திற்கும் சாபத்திற்கும் பரிகாரம் ஏற்ப்பட்டது. ஆதாமாவையும், ஏவாளையும் வஞ்சித்த சாத்தான் இயேசுவையும் தேவ சித்தத்திலிருந்து விலகச்செய்ய முயன்றான். இயேசு 40 நாட்கள் உபவாசம் செய்துமுடித்ததும் சாத்தான் இயேசுவோடு போராடினான். அந்த போராட்டங்களிலெல்லாம் இயேசு வென்றார். இறுதியில் சிலுவையில் மரித்து சாத்தானின் தலையை நசுக்கி அவன்மேல் வெற்றிபெற்றார். ஆதாம் தேவ சித்தப்படி வாழமுடியாமல் விழுந்தான். இயேசு இறுதிவரை தேவ சித்தம் செய்து வெற்றிபெற்றார். சாத்தானையும், சாபத்தையும், பாவத்தையும் வென்ற இயேசு, போர் முடிந்தது என்ற பொருளில் முடிந்தது என்றார்

இயேசுவின் இந்த உலக வாழ்க்கை முடியும்போது “முடிந்தது” என்று கூறி நிறைவானவராகவும், வெற்றி அடைந்தவராகவும், தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தை அடையப்போகின்றவராகவும் காணப்பட்டார். நாம் இவ்வுலக வாழ்வை முடிக்கும்போது நமது நிலை எப்படியிருக்கும்? நாம் இயேசுவோடு சேர்ந்து அவருக்காக வாழும்போது நிறைவானவர்களாகவும், வெற்றி அடைந்தவர்களாகவும், சந்தோஷத்தை அடையப்போகின்றவர்களாகவும் இருப்போம். ஆமேன். அல்லேலுயா.
------------------------------------------
குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்: இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசாயா 44:3.

கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. சங்கீதம் 107:15-16.

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:32,36.
------------------------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment