Tuesday, March 22, 2016

தாகமாயிருக்கிறேன்

இயேசு கிறிஸ்து, சிலுவையில் பேசிய முதல் வார்த்தையில், தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார். (லூக் 23:34). இரண்டாவது வார்த்தையில், மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார் – லூக் 23:40-43. மூன்றவது வார்த்தையில், தன் தாயாகிய மரியாளுக்காக பேசினார். (யோவா 19:26,27). நான்காவது வார்த்தையில், உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார் (மத் 27:45,46). ஐந்தாவது வார்த்தையில், “தாகமாயிருக்கிறேன்” என்று இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார் (யோவா 19:28).

வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே “என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்கீதம் 22:15), “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்.

“தாகமாயிருக்கிறேன்…” என்று இயேசு கூறிய வார்த்தையைக் கேட்ட போர் வீரர்கள், அது அவருடைய சரீரத்தில் ஏற்பட்ட தாகம் என்று எண்ணி கசப்பு காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அவரோ ‘குடிக்கவில்லை’ என்று வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய தாகம் மிகவும் வித்தியாசமான ஒரு தாகம். சமாரிய ஸ்திரீயோடு பேசிக் கொண்டிருப்பதற்கு முன்பதாக, தன்னுடைய சீஷர்களிடத்திலே பசியாயிருக்கிறேன் என்ற அவருக்குப் போஜனம் கொண்டுவந்தபோது என் பசி தீர்ந்துவிட்டது என்று சொன்னார். அவருடைய பசி ஆத்தும பசி, அவரது தாகம் ஆத்தும தாகம். இன்றுகூட அவருடைய தாகத்தைத் தீர்க்க நமக்கு இஷ்டம் உண்டா?

எத்தனை ஆண்டுகளாக ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கென்று ஜீவித்து வருகிறோம். எத்தனை ஆத்துமாக்களை நாம் ஆயத்தப்படுத்தியிருக்கிறோம். எத்தனை ஆத்துமாக்களை ஆண்டவருடைய பாதத்திலே கொண்டுவந்திருக்கிறோம்? இயேசு கிறிஸ்து நம்மை நம்பி நம் கரங்களிலே ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த மந்தையிலுமில்லாத அநேக ஆடுகள் எனக்கு உண்டு. அந்த ஆடுகள் இந்த மந்தைக்குள் வரும்வரை, நான் தாகமாயிருக்கிறேன், என் தாகத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்களா? என்று சொல்லி, கர்த்தர் உங்களைப் பார்த்து கேட்கின்றார். அவரது தாகத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்களா?
------------------------------------------
குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்:
இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். ஏசாயா 51:3

நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய், உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். ஏசாயா 54:3

உன் சிருஷ்டிகரே உன் நாயகர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். ஏசாயா 54 :5
------------------------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment