Friday, May 6, 2016

பரிசுத்தத்தை விரும்புகிறவர் - 07.05.16

மனிதனைக் கர்த்தர் படைத்ததின் நோக்கம் தேவ துதர்களோடு பங்கு வைக்க முடியாத தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கும், பரிசுத்தமான ஒரு சந்ததி இந்த பூமியில் பிறக்கவும், சகலத்தையும் மனிதன் ஆளுகை செய்யவும் தான். ஆனால் பரிசுத்த சந்ததிக்கு பதில் பாவ சந்ததி பிறக்க ஆரம்பித்தது. ஆபேலை அவனது சகோதரன் காயின் கொலை செய்த பின் அவனுக்கு பின்னால் ஆதாம் ஏவாள் தம்பதியின் மகனான சேத் பிறந்தான். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி 4.26). ஏனோசின் சந்ததி தேவ புத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் தேவனைத் தொழுது கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். கானானின் சந்ததி பாவ சந்ததியாக கருதப் பட்டார்கள்.

இந்த கால கட்டம் என்பது ஆதி பெற்றோருக்கு வேறே வேலைகள் ஒன்றும் அதிகமாக இல்லை. தொள்ளாயிரம் வருடம் வாழ்கிற மனிதனின் ஒரே வேலை பிள்ளை பிறக்கச் செய்தல் தான். அப்படி சந்ததிகள் பெருக பெருக பாவமும் பெருகினது. மனிதன் இருதயத்தின் யோசனை மிகவும் பொல்லாதது என்று தேவன் கண்ட போது மனஸ்தாபப் பட்டார். காரணம் இப்போதைய பாவம் தேவனுக்கு பிடிக்கவில்லை. காயீனின் சந்ததியான குமாரத்திகள் மிகுந்த அழகுள்ளவர்கள் என்பதைக் கண்ட சேத்தின் சந்ததிகளின் குமாரர்கள் இவர்களோடு சம்பந்தம் கலந்து பிள்ளைகளைப் பெற்றார்கள். இந்தப் பிள்ளைகள் மிகுந்த பலசாலி களாயிருந்தர்கள். ராட்சதர் என்பவர்கள் பலசாலிகள் அவ்வளவு தான். காரணம் அவர்கள் மலை தேசத்து மக்கள். கர்த்தர் எப்போதுமே பலத்தை அல்ல.. பரிசுத்தத்தை விரும்புகிறவர்.

இந்த நாட்களில் சிலருடைய சிந்தனை இப்படியாக இருக்கிறதை நாம் காண்கிறோம். தேவ புத்திரர் என்பவர்கள் விழுந்துபோன தேவ தூதர்கள். அவர்கள் மனுஷ புத்திரிகளோடு உறவுகொண்டு அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தது என்று தவறாகக் கூறுவதுண்டு. அது அவர்களின் அறியாமையாகும். தேவ தூதர்களின் உடலைக் குறித்து சரியாக புரிந்து கொள்ளவேண்டுமானால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சரீரத்தைக் குறித்து சிந்தித்தால் நன்றாகப் புரியும். தேவ தூதர்களுக்கு சரீரமுண்டு. ஆனால் சரீரத்தில் இரத்தமிருக்காது. மாமிசமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வதில்லை. இந்த சரீரம் வேண்டுமானால் ஆகாரம் சாப்பிடலாம். வனாந்திரத்தில் இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் கொடுத்த மன்னா தூதர்களின் உணவாகும். இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுந்த பின் சீஷர்களோடு அப்பமும் மீனும் சாப்பிட்டார். திடீரென்று பூட்டிய அறைக்குள் பிரவேசித்தார். தேவ தூதர்களின் தரிசனம் மனிதர்களோடு எப்படி எங்கெல்லாம் இருந்தததோ அவைகளில் அனேகம் பூட்டிய அறைகள், தேவாலயத்தின் உள்ளறைகள் என்பதை அறிந்து கொள்ளமுடியும். இவர்களுக்கு ஒருபோதும் மனிதர்களோடு சரீர, ஆத்தும உறவுகள் இருந்ததில்லை. இவர்கள் பணிவிடை ஆவிகள் அவ்வளவு தான் (வெளி 22.8-9). எனவே தேவ புத்திரர் என்பவர்கள் விழுந்து போன துதர்கள் கிடையாது.

தேவனாகிய கர்த்தர் இரண்டு வித ஜாதிகளின் திருமணத்தை வெறுக்கவில்லை. இரண்டு வழிபாட்டு முறை உள்ளவர்களின் திருமண பந்தத்தை வெறுத்தார். அதைத் தான் பவுல் அழகாகச் சொல்லுவார். கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (II கொரி 6:15). எனவே கர்த்தர் அந்த நாட்களில் வாழ்ந்த அத்தனை மனிதர்களை மட்டுமல்ல சர்வ பூமியனத்தையும் அழித்தார். அதன் பின்பு வந்த நோவாவின் சந்ததியில் பிறந்து சாபத்தைப் பெற்ற காமின் சந்ததியையும் கர்த்தர் வெறுத்தார். நிம்ரோத், பாபேல் கோபுரம், பாஷை தாறுமாறாதல்,ஜாதிகளின் தோற்றம், நாடுகளின் தோற்றம், கலாச்சாம், வழிபாட்டு முறை என்று சரித்திரம் நீண்டு கொண்டே போகும். சர்வ பூமியின் கலாச்சாரமும் அழிவும் ஆரம்பித்தது பாபிலோன் தான். எனவே அந்த கலாச்சாரமோ வழிபாட்டு முறையோ இல்லாத பரிசுத்த சந்ததியை மீண்டும் உருவாக்குவதற்காக கர்த்தர் ஆபிரகாமை தெரிந்து கொண்டு அவன் மூலம் செயல்பட ஆரம்பித்தார்.

நான்கு நூற்றாண்டுகள் வேறொரு ஜாதி ராஜாவின் கீழ் அடிமையாக இருந்தால் அந்த ஜாதிகள் ஒரு விதத்திலும் முன்னேறிய ஜாதியாக இருக்க முடியாது.கிட்டத்தட்ட ஒரு முட்டாள் கூட்டமாகத் தான் இருக்கும். அடிமைகளின் அனுபவம் ஓரளவிற்கு இந்தியர்களாகிய நமக்குத் தெரிந்திருக்குமென நான் நம்புகிறேன். அந்த வலி அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும்போது எப்படியிருக்கும்.இப்பொழுதும் இந்தியாவில் குறிப்பிட்ட சமுதாயங்கள் எத்தனைத் தலைவர்கள் எழும்பியும் எப்படித்தான் இருக்கிறது.தமிழ் நாட்டில் எப்படி யிருக்கிறது என்பதெல்லாம் நமக்கு முன்பாக இருக்கிறது. அப்படியானால் ஒரு தேசத்திற்குப் போய் நன்றாக வாழ்ந்து பின்பு அடிமைப்படுகிற இஸ்ரவேலரின் நிலை எப்படியிருந்தது என்பது வேத புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். அப்படிப் பட்ட சூழலை கர்த்தர் அனுமதித்து அந்த ஜனங்களை வேறு படுத்தி புதிய கலாச்சாரத்துக்கு கொண்டு வந்து தான் விரும்பும் பரிசுத்த ஜாதியாக உருவாக்கும் ஒரு பெரிய செயல் திட்டம் தான் இந்த நானுறு வருட அடிமை அனுபவத்தின் வாக்குத்தத்தம். அந்த திட்டம் செயல் பட ஆரம்பித்தது ஆபிரகாமின் கர்ப்பப் பிறப்பான ஈசாக்கினிடத்தில் துவங்குகிறது. தொடரும்..
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment