இயேசு கிறிஸ்துவின் நாட்களில் யூதேயா தேசம் ரோமர்களின் கைவசம் இருந்தது. இயேசு கிறிஸ்துவுக்கு “செலோத்தே என்னப்பட்ட சீமோன்” என்னும் ஒரு சீடர் இருந்ததாக வேதாகமத்தில் வாசிக்கிறோம். (லூக் 6:15, அப் 1:13). இவரைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாக காணப்படாவிட்டாலும், இவர் “செலோத்தியர்” என்ற பிரிவை சார்ந்த யூதனாக இருந்தார். யூதேயா தேசத்தில் பரிசேயர், சதுசேயர், எசெனியர் என்ற மூன்று பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். “செலோத்தியர்” என்ற நான்காவது பிரிவினர் எவ்வாறு தோன்றினார்கள்? என்பது தெரிந்திருந்தால் அவர்களில் ஒருவரை, இயேசு தமக்கு சீடராக ஏற்ப்படுத்தியதின் நோக்கத்தை நம்மால் அறிய முடியும்.
மரியாள் இயேசுவைக் கருவில் தாங்கிய, “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்” (லூக்கா 2:1-5).
அங்கு மரியாளுக்கு பிரசவகாலம் நேரிட்டு இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிவோம்.
தற்காலத்தில் குடிமதிப்பு (Census) எழுதுவது சர்வசாதாரணம். ரோம மன்னரான “அகுஸ்துராயன் அல்லது அகஸ்டஸ் சீசரால்” தான் இக்காரியம் முதன்முதலாக உலகில் அமுல்படுத்தப்பட்டது. இதை வரிவிதிப்பதற்காகவே ஏற்படுத்தினான் அகஸ்டஸ். பதினான்கு ஆண்டிற்கு ஒருமுறை இந்த குடிமதிப்பானது எழுதப்பட வேண்டும். இன்றைய நாட்களில் மக்கள்த்தொகை கணக்கெடுப்பின் பொழுது அரசு அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப நபர்களின் எண்ணிகையை சேகரிப்பார்கள். ஆனால் அந்த நாட்களின் குடிமதிப்பின்போது அவரவர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். இது எத்தனை சிரமமான காரியம்.
இதனால் தான் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் தங்குவதற்கு சிரமப்பட வேண்டியதாயிற்று. இயேசுவின் 14 வயது, 28 வயது ஆகியவற்றிலும் குடிமதிப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார்போல வரி விதிப்பார்கள். இந்த கொடுமைகளை எதிர்த்து யூதேயா தேசத்தில் யாரும் போராட முன்வராத பொழுது, கலிலேயா நாட்டைச்சேர்ந்த "யூதாஸ்" என்பவர் (https://en.wikipedia.org/wiki/Judas_of_Galilee), அகஸ்டஸ் சீசர் கொண்டு வந்த குடிமதிப்பு முறையை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் போராடத் தொடங்கினார். நாட்டுக்காவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரையும் கொடுத்து போரிடும் போராளிகளைப் பற்றி நாம் அறிவோம். அதேப்போன்று ஒரு போரிடும் குழுவாக “செலோத்தியர்”கள் உருவெடுத்தார்கள்.. தொடரும்..
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment