செலோத்திய பிரிவைச் சார்ந்தவர்கள் பழைய ஏற்பாட்டில் தங்கள் முன்னோடிகளாக யாக்கோபின் குமாரர்களான சிமியோனையும் லேவியையும் கொண்டிருந்தனர். பரிசேயர், சதுசேயர், எசெனியர் என்ற மூன்று பிரிவைச் சேர்ந்தவர்களும் ஆபிராகமையும், மோசேயையும் தங்களுக்கு முன்னோடிகளாக கொண்டிருந்தபோது, செலோத்திய பிரிவைசசார்ந்தவர்கள் எதற்காக சிமியோனையும் லேவியையும் தங்கள் முன்னோடிகளாக தெரிந்தெடுக்க வேண்டும்? இவர்கள் இருவரும் பட்டயத்தை எடுத்துக்கொண்டு சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்தின்மேல் பாய்ந்து, அங்குள்ள ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்ட (ஆதி 33) சம்பவத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
யாக்கோபுக்கு பன்னிரெண்டு குமாரர்களும் ஒரு குமாரத்தியும் இருந்தனர். “லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்” (ஆதியாகமம் 34:1). இது ஒரு தவறான முடிவு என்று நாம் அறிவோம். அவள் தேசத்துப் பெண்களைத் தானே பார்க்க புறப்பட்டு போகிறாள். இதில் என்ன தவறு? என்று சிந்திக்கலாம். தீனாள், ஒருவேளை தன் அண்ணன்மார் மந்தையை மேய்க்க சென்ற வேளையில், அவள் புறப்பட்டு அந்த ஊரில் உள்ள பெண்களைப் பார்த்து, மகிழ்ந்து வரலாம் என்று நினைத்திருக்கலாம்.
ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், தமது கிருபையால் அவர்களை தன் சொந்த ஜனமாக தெரிந்து கொண்டு, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு அவர்களை நடத்தி வந்ததைப் பற்றியும், அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், வழி தவறிய நேரத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றியும், தீனாள் யோசிக்கவில்லை. அவள் தன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போய், தேவ பயம் இல்லாத புறஜாதியினரிடம் நட்பு கொள்ள ஆசைப்பட்டாள். நட்பின் மேல் அவள் கொண்டிருந்த ஆவல், அவள் தேவனுடைய கட்டளைக்கு செவி கொடுக்காமல் செல்லும்படி செய்தது. தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனுடைய சித்தத்தையும் விட்டு பாதுகாப்பில்லாத ஊருக்குள் புறஜாதியினரின் நட்பை நாடி செல்கிறாள்.
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான் (ஆதியாகமம் 34-2) என்று வாசிகின்றோம். இதனால் விளைந்தது என்ன? தேவனுடைய அன்பை அந்த ஊராருக்கு பறைசாற்ற வேண்டிய குடும்பம், அந்த ஊராரை கொலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. “யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்” (ஆதி 34:25).
தீனாள் தன் சுய புத்தியால் எடுத்த இந்த ஆபத்தான முடிவு, சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்தை அழித்ததோடு அல்லாமல், பல ஆண்டுகள் கழித்து செலோத்தியர்கள் என்ற பிரிவு உண்டாகவும் காரணமாயிற்று. “செலோத்தே” என்னும் சொல்லுக்கு “கடும் முனைப்பானவர்கள் அல்லது கோபம் உடையவர்கள்” என்று பொருள். மார்க்க வெறி மற்றும் இனவெறி கொண்டவர்களாக செலோத்திய பிரிவைச் சார்ந்தவர்கள் காணப்பட்டார்கள். இதற்காக ஆயுதம் ஏந்தி போரிட்டு தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க அவர்கள் ஆயத்தமாக இருந்தார்கள். இப்படிப்பட்ட பிரிவைச் சார்ந்த செலோத்தே என்னப்பட்ட சீமோனை, ஏன் இயேசு தமது சீடராக தெரிந்தெடுத்தார் என்பதை வரும் நாட்களில் தியானிக்கலாம்.
தீனாளின் மதிகேடான செயல் இன்று நமக்கும் ஒரு பாடமாக அமைகிறது. நாம் எத்தனை முறை தீனாளைப் போல தேவனுடைய சித்தம் இல்லாத சிறு ஆசைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். ஒரு மரம் அதன் கனியினால் அறியப்படுவதைப் போலவே, நாம் நம் நடத்தையினால் அறியப்படுவோம். நன்மையும் தீமையும் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் குறுக்கிடும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற பயம் நமக்குள் கொழுந்து விட்டு எரிய வேண்டும். அந்த பயத்தை நம் குடும்பத்தினருக்கும் ஊட்ட நாம் தவறக் கூடாது.
----------------------
Hannah prayer 41st testimony.
ஐயா,
தாங்கள் 40 நாட்கள் உபவாசம் இருந்து குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்திர்கள் எனது சகோதரன் ( வினோத்/ஜாஸ்மின்) இருவரின் பெயரும் அனுப்பி இருந்தோம் நாங்களும் விசுவாசத்துடன் ஜெபித்தோம் . கர்த்தர் நம் அனைவரின் ஜெபத்தையும் கேட்டு எனது சகோதரனின் மனைவி சுமார் 8 வருடம் கழித்து கர்ப்பம் தரிக்க உதவி செய்தார் கர்த்தருக்கே அணைத்து துதி கணத்தை செலுத்துகிறோம் எங்களுக்காக ஜெபித்த தங்களுக்கும் மற்றும் அணைவருக்கும் இந்நேரத்தில் அன்பு கலந்த நன்றியை குடும்பத்தினர் அணைவரும் தெரிவித்து கொள்கிறோம்
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment