Tuesday, August 2, 2016

செருபாபேல் (5) - 02/08/16

செருபாபேல் (5) - 02/08/16

சேஸ்பாத்சார் - உபத்திரவத்தின் மத்தியில் சந்தோஷம்

பாபிலோனிய, பெர்சிய ஆட்சிக் காலங்களில் சிறை கைதிகளாக வாழ்ந்த யூத மக்கள், காலம் நிறைவேறியபோது, ஆலயத்தையும், எருசலேமின் அலங்கத்தையும் கட்டியெழுப்பும்படி மூன்று கட்டமாக எருசலேமுக்குத் திரும்பினர். அதிலே முதலாம் கட்டமாகப் புறப்பட்டவர்களை செருபாபேல் வழிநடத்தினார். செருபாபேலுக்கு சேஸ்பாத்சார் (எஸ்றா 1:8 & 1:11 & 5:14) என்ற பெர்சிய பெயரும் இருந்தது. சேஸ்பாத்சார் என்ற பெயருக்கு “உபத்திரவத்தின் மத்தியில் சந்தோஷம்” (joy in tribulation) என்று பொருள்.

தேவனிடமிருந்து கிடைத்த சிட்சையின் பலனாகவே எருசலேமும் அதன் ஆலயம் அழிக்கப்பட்டன. கீழ்ப்படியாமல் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த யூதேயா தேசத்து மக்கள் சிறைக் கைதிகளாக, அடிமைகளாக பாபிலோனியா தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். இருந்தாலும் யூதர்களை பூண்டோடு அழித்துவிட தேவன் விரும்பவில்லை. தேவனுடைய சிட்சையின் நோக்கத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”(எபிரெயர் 12:11).

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து” (ரோமர் 5:3). பரீட்சை என்றால் பெலன் (Strength) என்று அர்த்தம். உபத்திரவம் நமக்கு முதாலவது பொறுமையை கற்றுத்தருகின்றது. இந்த பொறுமை நம்மை பலமுடையவர்களாக மாற்றுவதாக வேதம் கூறுகின்றது. உபத்திரவத்தில் நம்மை அழிக்கத்துடிப்பது சாத்தானின் திட்டம். உபத்திரவத்தில் நம்மை பலமுடையவர்களாக மாற்ற விரும்புவது தேவனின் திட்டம்.

ஆகவே, “உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” ரோமர் 5:4,5.).அன்றைக்கு உபத்திரவத்தின் மத்தியில் சந்தோஷம் தரும் வகையில் செருபாபேல் என்ற சேஸ்பாத்சார் பாபிலோனில் பிறந்தார். பல்வேறு வகையில் அலைக்கழிக்கப்பட்டு, உபத்திரவப்பட்டு, நிலைகுலைந்த மக்களின் வாழ்வில் சந்தோஷத்தை கொண்டு வருவதற்காக சேஸ்பாத்சார் பிறந்தார்.

சுமார் 500 வருடத்திற்கு பின்பு, நலிந்த நிலையில் காணப்பட்ட உலக மக்களின் வாழ்வில் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாக கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருந்தார். (லூக்கா 2: 10-11). உங்கள் வாழ்கையில் உபத்திரவமா? போராட்டமா? “உபத்திரவத்தின் மத்தியில் சந்தோஷம்” உண்டு பண்ண இயேசு கிறிஸ்து வல்லமை உடையவராக இருகின்றார். மனம்தளராமல் இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அவர் நம்மை கைவிடுவதில்லை. ஆமேன். அல்லேலுயா.
------------------------------
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். எமது அனுதின தியானத்தை வாட்ஸ்அப்பில் பெறுவதற்கு +919916114455 எண்ணை உங்கள் மொபைலில் பதிவு (SAVE) செய்து பின்னர் “NEED“ என்று அனுப்புங்கள். மின்னஞ்சலில் பெற Visit us @ www.kinggospel.com
------------------------------

No comments:

Post a Comment