Wednesday, August 17, 2016

என்னுடையவர்கள் – 17/08/16

“என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே” அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:17

கலிபோர்னியாவில் போர்ட்பிராஹ் என்ற இடத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்து வந்தவர்கள், அவர்களது குப்பைக் கூழங்களை, ஒரு செங்குத்தான பாறைக்கு அந்தப்பக்கம் இருந்த கடற்கரையில் விட்டெறிந்து வந்தார்கள். டப்பாக்கள் பாட்டில்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் என மலைபோல குப்பை, அக்கடற்கரையில் சேர்க்கப்பட்டு அருவருப்பான காட்சியாகக் காணப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் அவ்வாறு குப்பையை கடற்கரையில் தூக்கி எறிவதை நிறுத்தினபொழுதும் கூட, அந்தக் குப்பபைக் குவியல் பார்ப்பதற்கே அருவருப்பான உணர்ச்சியை கொடுக்கக் கூடியதும், எந்த வழியிலும் மறுபடியும் சரி செய்ய முடியாது போன்றும் காணப்பட்டது.

ஆண்டுகள் கழிந்த பொழுது கடற்கரையில் மோதிய அலை அங்கிருந்த கண்ணாடிகளையும், மண்பாண்டங்களையும் உடைத்தது. மற்ற குப்பைக் கூழங்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது. மோதி அடிக்கும் அலை தரையில் கிடந்த கண்ணாடித்துகள்களை உருட்டி புரட்டி சமுத்திரத்தன் அடியில் தள்ளி அவற்றின் சொரசொரப்பான பரப்பை பளபளப்பாக மாற்றி விலையேறப்பெற்ற கல்போன்ற “கடற் கண்ணாடியாக” மாற்றி அமைத்தது. இந்த பளபளப்பான, வழு வழுப்பாக மாற்றப் பட்ட கடற்கண்ணாடிகள் அலையினால் மறுபடியும் கடற்கரைக்கு அடித்துவரப்பட்டன. அதனால் அந்த கடற்கரை முழுவதும் பல்வேறு கண்ணைக் கவரும் அழகான நிறங்களுடனும், பல்வேறு வடிவங்களுடனும் காணப்பட்டதால், அந்தக் கண்ணாடி கடற்கரைக்கு வருபவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

ஒருவேளை உங்களது வாழ்க்கை நம்பிக்கையற்ற குப்பையைப் போல இருப்பதாக நீங்கள் உணரலாம், அப்படியானால் உங்களை மீட்டு சீர்ப்படுத்த உங்களை நேசிக்கும் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். உங்களது இருதயத்தை இயேசுவுக்கு தந்து உங்களைப் பரிசுத்தமாக்க அவரிடம் கேளுங்கள். ஒருவேளை அவர் உங்களைப் பல்வேறு உபத்திரவங்களில் உருட்டி எடுக்கலாம். உங்களது வாழ்க்கையிலுள்ள கூர்மையான ஓரங்களை வழுவழுப்பாக்க சிறிது காலமாகலாம். ஆனால் அவர் உங்களை ஒருக்காலும் கைவிட்டு விடுவதில்லை. அவர் உங்களை அவரது ஆபரணங்களில் ஒன்றாக உருவாக்குவார்!
------------------------------
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். எமது அனுதின தியானத்தை வாட்ஸ்அப்பில் பெறுவதற்கு +919916114455 எண்ணை உங்கள் மொபைலில் பதிவு (SAVE) செய்து பின்னர் “NEED“ என்று அனுப்புங்கள். மின்னஞ்சலில் பெற Visit us @ www.kinggospel.com
------------------------------

No comments:

Post a Comment